No icon

சமூக வரலாற்று நாவல்  ‘முன்னத்தி’

சமூக வரலாற்று நாவல்  ‘முன்னத்தி

அருளப்பர் சாமி என்ற ஜான் பேப்டிஸ்ட் திரிங்கால் சே.ச. அவர்களின் பணி, வாழ்வு பற்றிய சமூக வரலாற்று நாவல்

 MáÇa® : kh‰F பக்கங்கள் : 586, விலை: ரூ. 550

பணி ச.தே.செல்வராசு

மாற்கு - நூலாசிரியர்: மாற்கு அவர்கள் இதுவரை வருவான் ஒரு நாள் (1980) தொடங்கி ஐம்பேரியர்கை (2018) வரை 12 நாவல்கள்…(இவற்றில் சுவர்கள், கத்தியின்றி இரத்தமின்றி ஆகியவைநம் வாழ்வுஇதழில் 1980 -களில் தொடர்களாக வெளியாயின), 4 புலனாய்வுகள், 2 தன் வரலாறுகள், ஒரு சிறுகதைகள் தொகுப்பு, ஒரு மானிட இயல், ஒரு விழிப்புணர்வு, ஒரு இறையியல் என மொத்தம் 22 படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே நூலாசிரியர் மாற்குக்கு திரிங்கால் சாமியிடம் ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. எனவே அவர் குறித்த செய்திகளை வாசிக்க நேர்ந்தபோது, திரிங்காலின் ஆளுமையைக் கண்டு வியந்திருக்கிறார். இந்த வியப்பு திரிங்காலைப் பற்றி இன்னும் அதிகம் அறிய வேண்டும் என்ற ஆவலை இவரில் கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. திரிங்காலின் அற்புதமான பணிகளைப் பின்பற்றி தாமும் அவர்போல செயல்பட வேண்டும் என்ற விதையை ஆசிரியரின் உள்ளத்தில் விதைத்திருக்கிறது.

ஒருவகையான கற்பனை உலகிலேயே திரிங்கால் சாமியுடன் மாற்கு பயணித்திருக்கிறார். தூத்துக்குடி மறைமாவட்டம் கோட்டூர் பணித் தளத்திலும், செங்கல்பட்டு மறைமாவட்டம் வடமேல்பாக்கத்திலும் மாற்கு கட்டிய இல்லங்களுக்குதிரிங்கால் இல்லம்என்று பெயர் சூட்டி அவரது நினைவிற்கு உயிரூட்டியிருக்கிறார். திரிங்கால் பற்றி பிறரிடம் பேசியும், அவர் குறித்து சில கட்டுரைகளையும் எழுதியுமிருக்கிறார். திரிங்காலின் 200 வது பிறந்த நாள், 17 ஆண்டுகள் அவர் பணியாற்றிய வத்திராயிருப்பு புதுப்பட்டியில் கொண்டாடப்பட்டது. அப்போது மாற்கு திரிங்கால் சாமிகளின் பணியும், வாழ்வும் பற்றி பல அரிய செயல்களைப் பகிர்ந்து கொண்டதை அடியேனும் கேட்டு மகிழ்ந்தேன். அது எனது பணி வாழ்வையும் கூர்மைப்படுத்த ஊக்கமளித்தது.

மாற்கினுடைய பணிகளைப் பார்க்கும்போது, திரிங்கால் சாமிகள் மாற்கின் பணி வாழ்வுக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறார் என அறிய முடிகிறது. இந்நூலின் தலைப்புமுன்னத்திஇதை உறுதிப்படுத்துகிறது.

நிலத்தை உழும்போது பல ஏர்கள் அடுத்தடுத்து ஒன்றாகச் செல்லும். முதலில் செல்கின்ற ஏரைமுன்னத்தி ஏர்என்பர். நூலாசிரியர் மாற்கின் பணிக்கும், இயேசு சபை மதுரை புதிய பணித்தளத்திற்கும், திரிங்கால் சாமிகள் முன்னத்தி ஏராகப் பல பணிகளை முன்னெடுத்திருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே திரிங்கால் பற்றி சேகரித்த தரவுகள், அருள்பணி. பூஜோ சே.. காரிதாஸ் இதழில் எழுதிய திரிங்கால் வரலாறு, கொடைக்கானல் செண்பகனூர் ஆவணக் காப்பகத்தில் கிடைத்த தகவல்கள், முதியோர்களிடமிருந்து பெற்ற வாய்மொழி வரலாறுகள் போன்ற அனைத்தையும் தொகுத்து திரிங்கால் குறித்து ஒரு சமூக வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் மாற்கு.

சமூக வரலாற்று நாவல்

அடியேனது சிற்றறிவுக்கு எட்டியவரை முதன்முதலாக இராகுல் சாங்கிருத்தியாயன் மனித குல வரலாற்றை நாவலாக எழுதியவர். அது அவரது படைப்பாகிய புகழ்பெற்றவால்கா முதல் கங்கை வரைஎன்ற வரலாற்றுப் புனைவாகும். இந்நூல் கி.மு. ஆறாயிரத்தில் தொடங்கி கி.பி.1942 இல் நிறைவு பெறுகிறது. இவரது மற்றொரு நூல்சிந்து முதல் கங்கை வரைஎன்பதாகும்.

ஏற்கனவே சொன்னதுபோல மாற்கு 22 படைப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார். ஆயினும்முன்னத்தி…’ என்பது தான் மாற்கு எழுதிய சமூக வரலாற்று நாவலாகும். 16 வது நூற்றாண்டு தொடங்கி, 19 வது நூற்றாண்டு வரையிலான தமிழக கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் பணிகளை வரலாற்று நாவலாகப் படைத்திருக்கிறார்.

திரிங்கால் சாமி

1815 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்து 1844 இல் திரிங்கால் சாமிகள் இயேசு சபையின் மதுரை புதிய பணித்தளத்திற்கு வருகிறார். அதாவது பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் 26 ஆண்டுகள் கழித்து இவர் பிறக்கிறார். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்என்ற புரட்சிக் காற்றை சுவாசித்து வளர்கிறார். புரட்சியின் விழுமியங்கள் இவரது உள்ளத்தில் மிக ஆழமாக, அழுத்தமாகப் பதிந்திருந்தன. இவற்றையே தமது மதுரை புதிய பணித்தளத்தில் நனவாக்க முனைந்து செயல்படத் தொடங்குகிறார்.

திருச்சி, தஞ்சை, மதுரை, உசிலம்பட்டி, விருதுநகர், திருவில்லிப்புத்தூர், வெள்ளர், இளயரசனேந்தல், .புதுப்பட்டி போன்ற பணித்தளங்களுக்கு நெடுந்தூரம் நடந்தும், மாட்டு வண்டியிலும், குதிரையிலும் பயணம் செய்தார். ஜமீன்தார், பண்ணையார்களுடைய ஆதிக்கங்களை எதிர்த்தார். அடித்தள ஏழை எளிய மக்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தினார். இம்மக்களுடைய குழந்தைகளுக்குப் படிக்க பள்ளிகளையும், பெரியவர்களுக்கு மறைக்கல்வியையும், வழிபடுவதற்கு ஆலயங்களையும் மக்களோடு இணைந்து அமைத்தார். திருஅவை தற்சார்புடையதாக விளங்க பேட்டைகளை உருவாக்கி, ஆலயங்களுக்காக நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய வழிவகுத்தார்.

இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு .புதுப்பட்டியில் நிறைவு செய்திருக்கிறார். இவரது பணிகளில் ஏறக்குறைய இறுதி 17 ஆண்டுகள் .புதுப்பட்டியையும் அதைச் சுற்றியுமே அமைந்திருக்கின்றன. இன்றைய விருதுநகர் மாவட்டத்தை முழுமையாகவும், அதையும் கடந்தும் தனியொருவராகப் பணியாற்றியிருக்கிறார்.

திரிங்கால் சாமியுடைய ஆளுமையும், பணியும் பலபரிமாணங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அக்காலத்தில் சாதியோடு சமரசம் என்பதே திருஅவையின் கொள்கையாக இருந்தது. அதனால் குருக்களும், துறவிகளும், உயர்த்திக்கொண்ட சாதியினரும் தலித் கிறிஸ்தவர்களை மிகவும் தாழ்வாக நடத்தினர். இச்சூழலில் திரிங்கால் தமது பணியை ஆலயம் - வழிபாடு கடந்து சமூகத் தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். விதவைத் திருமணம், குடிவெறிப் பழக்கங்கள், சோம்பேறித்தன ஒழிப்பு, ஏழைகளுக்கு வீடு, விடுதி, ஜமீன்தார் - ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு, பனை ஏறுவோர், தலித் மக்களுக்கு விடுதலைப் பணி, பஞ்ச நிவாரணம், மூடப்பழக்கங்கள் ஒழிப்பு, இலக்கியப் பணி என அடித்தள மக்களை மனித நேயத்தோடு வாழவைக்கத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களை புற, அக அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்து, அவர்கள் சுதந்திர மனிதர்களாக வாழ - வழிபட வைப்பதை மையம் கொண்டே அடிகளாரின் பணிகள் பயணித்தன. குறிப்பாக அவரது பணிக்குத் துணையாக இருந்த மிக்கேல் சந்நியாசி, சவரிமுத்து, ஒற்றைக் கண் அருளப்பன் ஆகியோரது பங்களிப்பு வியப்பளிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்குத் திருஅவை ஏன் முக்கியம் கொடுப்பதில்லை என்ற திரிங்காலின் கேள்வி இன்றும் முக்கியத்துவம் பெறுகிறது.

திரிங்கால் சாமிகள் சமூகப் பண்பாட்டு புரட்சியாளர் இயேசு போல ஒரு போராட்டக்காரர். 19 ஆம் நூற்றாண்டில் இறைவாக்கினராக வாழ்ந்திருக்கிறார். யூதர்கள் மிகப் புனிதம் என்று கருதிய ஓய்வு நாளில் இயேசு பலரைக் குணப்படுத்தினார். இக்கலகச் செயல் வழியாக ஓய்வு நாள் புனிதத்தைக் காட்டிலும் இறைச் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் நலமாக, நிறைவாக வாழவேண்டும் என்பது மிகப் பெரிய புனிதமாகும் என்ற பாடத்தைக் கற்றுத் தருகிறார். அதுபோல இறைவன் திருமுன் மனச்சான்றுக்கு முன் எது சரி, எது நல்லது எனப் பட்டதைத் துணிந்து செய்தார் திரிங்கால். உதாரணமாக விதவைத் திருமணம், தலித்களுக்கு முன்னுரிமை, மூடப்பழக்கங்கள் எதிர்ப்பு போன்றவைகளைச் சொல்லலாம். இதில் 20 ஆம் நூற்றாண்டு சமத்துவ - சமதர்மப் போராளியான தந்தை பெரியாருக்கும் இவர் முன்னோடி. இறுதியாக 01.05.1992 இல் மதுரையில் இறைபதம் சேர்ந்தார்.

மாற்கு இச்சமூக வரலாற்று நாவலைப் படைத்திருக்கும் பாணி அலாதியானது. திரிங்கால் சாமிகளின் கடந்த காலத்திற்கு வாசகரை அழைத்துச்சென்று தமது சமகாலத்தில் அவருடைய ஆளுமையை, பணிகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார். திரிங்காலின் பன்முக ஆளுமைக்குள் புகுந்து மாற்கு அவரை நம் கண்முன் பல வண்ணச் சித்திரமாகத் தீட்டுகிறார். பொருத்தமான இடங்களில் 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான திருஅவையின் வரலாற்றை இயல்பாக விவரிக்கிறார். குறிப்பாக அக்காலத்தில் இருந்த பத்ரவாதோ - விசுவாசப் பரப்புதல் அமைப்புக்கு இடையேயான பிரச்சனைகளை தெளிவாக விளக்கியுள்ளார். இவை இதுவரை அதிகம் சொல்லப்படாத, எழுதப்படாத வரலாற்றுப் பதிவுகள். இவற்றை எப்படிச் சேகரித்தார் என்று நாம் வியக்கிறோம். சமூக வரலாற்றை இப்படியும் நாவலாக எழுதலாம் என்பதற்குமுன்னத்திஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது. மாற்கு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

வரலாறு தெரியாதோரால் வரலாற்றைப் படைக்க முடியாது என்று கூறுவர். வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று மாணவர்கள் மட்டுமல்லாது அருள்பணியாளர்களும், இருபால் துறவிகளும் திரிங்கால் எப்படி மக்களோடு மக்களாய் மக்கள் வாசம், மண் வாசம் சுவாசித்து வாழ்ந்திருக்கிறார் என்பதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஏன், எப்படி திரிங்கால் பள்ளிக்கூடங்களைக் கட்டினார் என்பதை மட்டுமன்று; மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் உருவாக்கினார் என்பதை ஆசிரியர்கள் கற்கலாம். புதினப் படைப்பாளிகள் இப்படியும் சமூக வரலற்றுப் புதினத்தை எழுதலாம் என கற்க முடியும். எல்லாவற்றிக்கும் மேலாக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் பணிசெய்யமுடியும் என்பதை மாற்கு காட்டும் திரிங்காலிடமிருந்து படிக்கலாம்.

முன்னத்திநூலை வாசித்துப் பயன்பெற அனைத்து தரப்பினருக்கும் அடியேன் பரிந்துரைக்கிறேன்.

Comment